சேலம் மாவட்டத்தில் தபால் வாக்கு பெறும் பணி: ஆட்சியர் ஆய்வு
தபால் வாக்குபதிவு ஆய்வு செய்த ஆட்சியர்
நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டுப்பதிவு வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 12-டி விண்ணப்ப படிவத்துடன் தபால் ஓட்டுப்பதிவுக்கு விருப்பம் தெரிவித்துள்ள நபர்களின் வீடுகளுக்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டுப்பதிவு பெற்றும் பணிகள் தொடங்கின.
மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டசபை தொகுதிகளிலும் தபால் வாக்கு செலுத்த 9,402 பேர் விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். நாளை (திங்கட்கிழமை) வரை இந்த தபால் ஓட்டுப்பதிவு பெறும் பணிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், 2-வது நாளான நேற்று வீரபாண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி, நைனாம்பட்டி பகுதிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாகளின் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று தபால் வாக்குப்பதிவு பெறுவதை மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.