தபால் வாக்குகள் முழு பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

தபால் வாக்குகள் முழு பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பதிவான பிற நாடாளுமன்ற தொகுதியின் 1,517 தபால் வாக்குகள் முழு பாதுகாப்புடன் திருச்சி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் பதிவான பிற நாடாளுமன்ற தொகுதியின் 1,517 தபால் வாக்குகள் முழு பாதுகாப்புடன் திருச்சி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்களவைப் பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் தபால் வாக்குகளை ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட வாகனத்தில் முழு பாதுகாப்புடன் திருச்சி மாவட்டம், மாநகராட்சி கலையரங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்களவைப் பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து அரசுத்துறை அலுவலர்கள், காவல் துறையினர், நுண்பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் மற்றும் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்ற இடங்களான நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம், அக்கியம்பட்டி வேத லோகா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, இராசிபுரம், எஸ்.ஆர்.வி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு தோக்கவாடி கே.எஸ்.ஆர். கல்லூரி, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரமத்தி வேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும், இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய 7 இடங்களில் தபால் வாக்கு பதிவு நடைபெற்ற முதல் நாள் 13.4.2024 அன்று நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 1,046 தபால் வாக்குகள், பிற நாடாளுமன்ற தொகுதியின் 1,352 வாக்குகள், இரண்டாம் நாள் 15.4.2024 அன்று நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 53 தபால் வாக்குகள், பிற நாடாளுமன்ற தொகுதியின் 125 தபால் வாக்குகள் மற்றும் மூன்றாம் நாளான 16.4.2024 அன்று நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 9 தபால் வாக்குகள், பிற நாடாளுமன்ற தொகுதியின் 40 தபால் வாக்குகள் என மொத்தம் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 1,108 தபால் வாக்குகளும், பிற நாடாளுமன்ற தொகுதியின் 1,517 தபால் வாக்குகளும் பதிவாகி உள்ளன. நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அலுவலர்கள் செலுத்திய தபால் வாக்குகள் இன்றைய தினம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து திருச்சி மாவட்டம், மாநகராட்சி கலையரங்கிற்கு துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்களுடன், துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனத்தில் முழு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களில் பணி புரியும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அலுவலர்கள் செலுத்திய வாக்குகள் திருச்சி மாவட்டத்திலிருந்து முறையாக நாமக்கல் மாவட்டத்திற்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் பாதுகாக்கப்படும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) .ந.சிவக்குமார் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story