காமேஸ்வரம் கடற்கரையில் அஞ்சல் துறையினர் தூய்மைப்பணி
தூய்மைப்பணி
உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினமாக ஜூன் 5-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு நாடுகளிலும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு, தூய்மைப் பணிகள் மற்றும் மரம் நடுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்புடைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று தமிழ்நாடு அஞ்சல் துறை திருச்சி மத்திய மண்டலம் சார்பில் நாகை மாவட்டம் விழுந்தமாவடி அருகே காமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அதிகம் வந்து கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் இப்பகுதியில் கடற்கரை தூய்மை வெகு முக்கியம் என்பதால் வனத்துறையினர் இந்த இடத்தை தேர்வு செய்து தந்தனர்.
இங்கு நாகப்பட்டினம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜோசப் ராஜ் தலைமையில் அஞ்சல் துறையினர் தூய்மைப் பணிகளை நேற்று காலை மேற்கொண்டனர். மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், ரேஞ்சர் ஆதி லிங்கம் உள்ளிட்ட வனத்துறையினரும் இதில் பங்கு பெற்றனர். இதே பல அஞ்சல் துறை சார்பில் கடலூர் மாவட்டம் கிள்ளையில் உள்ள ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் குஞ்சு பொரிப்பகம் உள்ள கடற்கரைப் பகுதியிலும் நேற்று தூய்மைப் பணியில் மேற்கொள்ளப்பட்டன. ரிட்லிஸ் ரெண்டஸ்வஸ் என்ற ஆலிவ் ரிட்லி ஆமைகளின் வரலாற்று தபால் தலை நூலும் அங்கு வெளியிடப்பட்டது.