நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 390 ராணுவ வீரர்களுக்கு தபால் வாக்குகள்
கோப்பு படம்
ராணுவத்தில் பணிபுரியும் 390 வாக்காளர்களுக்கு, எலக்ட்ரானிக் தபால் வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் கமிஷன் மூலம் லோக்சபா பொதுத்தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 16ம் தேதி வெளியிடப்பட்டது.
அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், மாவட்ட ஆட்சியர் உமா மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் லோக்சபா தொகுதியில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட சங்ககிரி - 71 வாக்காளர்கள், ராசிபுரம் - 55 வாக்காளர்கள், சேந்தமங்கலம் 94 வாக்காளர்கள், நாமக்கல் 79 வாக்காளர்கள், பரமத்தி வேலூர் 61 வாக்காளர்கள், திருச்செங்கோடு 30 வாக்காளர்கள் என மொத்தம் 390 வாக்காளர்கள், இந்திய ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு எலக்ட்ரானிக் தபால் வாக்குச்சீட்டுகள் (ETPBS) அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.