தபால் வாக்குப்பதிவு நாளை வரை நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் தகவல்
தபால் வாக்குகள் நாளை வரை நடைபெறும்
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வாக்குச் சாவடிகளுக்கு வர இயலாத முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது வீடுகளிலேயே அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சிவகங்கை பகுதியில் நடைபெற்ற அஞ்சல் வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத் பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வர இயலாத 85 வயதைக் கடந்த 1,809 பேர், மாற்றுத்திறனாளிகள் 1,221 பேர் என மொத்தம் 3,030 பேர் அஞ்சல் வாக்களிக்க விருப்ப மனு அளித்தனா்.
இவா்களது இருப்பிடங்களுக்கு அஞ்சல் வாக்குப் பதிவு நடத்த அமைக்கப்பட்ட 40 நடமாடும் வாக்குப் பதிவு குழுக்கள் நேரில் சென்று அஞ்சல் வாக்குப்பதிவு நடத்தினா். இந்த வாக்குப்பதிவின் போது, வேட்பாளா்களின் முகவா்களும் கலந்து கொண்டனா். வருகிற திங்கள்கிழமை வரை அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குப்பதிவு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்