இந்தி மொழியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் தேர்தல் பிரிவு அதிகாரிகளால் அகற்றம்!
இந்தி மொழி சுவரொட்டி
கோவை நகரின் பல்வேறு இடங்களில் ஹிந்தி மொழியில் சுவரொட்டிகள் வட இந்திய ஒற்றுமை மன்றத்தின் அறிவுறுத்தல் என்ற பெயரில் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இந்த முறை அனைவரும் வட இந்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.நமது குஜராத்தின் சிங்கம் அண்ணாமலை மோடிஜிக்கு முற்றிலும் விசுவாசமானவர்.பாஜக ஜெயிக்கட்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.மோடி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகியவற்றை குஜராத்துடன் சில நாட்களில் இணைப்பார் எனவும் இது சாத்தியம், இந்த முறை 400 தொகுதிகளை தாண்டி மோடி வெற்றி பெறுவார் எனவும் திராவிட கட்சி ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைய அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது ஒரு பொன்னான வாய்ப்பு, அண்ணாமலைக்கு வாக்களியுங்கள் நமது குஜராத்துக்கு வாக்களியுங்கள், நமது உத்தரபிரதேசத்திற்கு வாக்களியுங்கள் , ஜெய் ஸ்ரீ ராம் ,ஜெய் பாரத் மாதாகி என அந்த சுவரொட்டிகளில் ஹிந்தி மொழியில் இருந்தது.இந்நிலையில் பிரிவினையை தூண்டும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தபெதிக உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து நகரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த ஹிந்தி போஸ்டர்களை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் அகற்றினர்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தேர்தல் பிரிவு அதிகாரிகள் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்தனர்.