குண்டும் குழியுமாக உள்ள சாலை - பொதுமக்கள் சிரமம் !
சாலை
பச்சாபாளையம் கிராமம் சோழவலசில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் ஆபத்து - வாகனம் செல்ல சிரமம் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த பச்சாபாளையம் கிராமம் சோழவலசு பகுதியில் வெகு நாட்களாக சாலை சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அந்த சேதமடைந்த சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்கள் இந்த சாலையில் செல்லும் போது சாலையில் கிடக்கும் ஜல்லி கற்கள் சறுக்கி விட்டு விழும் அபாயமும், மழை நாட்களில் வாகனம் செல்லும் போது சாலை மேன்மேலும் சேதமடையவும் வாய்ப்புள்ளது.
பச்சாபாளையம் கிராமம் சோழவலசு பகுதியில் இருந்து ஓலப்பாளையம் கம்பளியம்பட்டி சாலை சந்திக்கும் கண்ணபுரம் பகுதி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.
பொதுமக்கள் தெரிவிப்பதாவது: கண்ணபுரத்தில் இருந்து சோழவலசு பகதி வரை செல்லும் இந்த தார் சாலை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு 2008 ஆம் ஆண்டு போடப்பட்டது. 4 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த சாலை மிகவும் மோசமாகவும், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ஜல்லி கற்களாக சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள், மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர், இரவு நேரங்களில் இச்சாலையில் பயணம் செய்வோர் ஆகியோர் பல வருடங்களாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இச்சாலை சீரமைப்பு குறித்து அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்தோம் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் இப்பகுதி அரசியல்வாதிகள் இச்சாலையை சீரமைத்து தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள் ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு கூறினர். மேலும் இச்சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.