நீர்நிலைகளில் களிமண் எடுக்க அனுமதிக்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

நீர்நிலைகளில் களிமண் எடுக்க அனுமதிக்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

 மண் பானை தயாரிக்கும் பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மண் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருக்காலிமேடு, வள்ளுவப்பாக்கம், அய்யன்பேட்டை, கெருகம்பாக்கம், குன்றத்துார், முசரவாக்கம், வேடபாளையம், அப்பையநல்லுார், காரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட மண்பாண்டம் செய்யும் தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொழிலுக்கு தேவையான களிமண்ணை, தாங்கள் வசிக்கும் பகுதி அருகில் உள்ள குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் இலவசமாக எடுத்து வந்தனர். இந்நிலையில், 2013 முதல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்நிலைகளில் களிமண் எடுக்க அரசு தடை விதித்தது. இதனால், இலவசமாக கிடைத்த களிமண்ணை வெளிமாவட்டத்திற்கு சென்று பணம் செலவழித்து மண் வாங்க வேண்டியுள்ளதால், பலர் மண்பாண்ட தொழிலுக்கு முழுக்குபோட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். தற்போது கோடைக் காலத்தையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மண் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் திருக்காலிமேடைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி பி.சிவலிங்க உடையார் கூறியதாவது: திருக்காலிமேடில், 25க்கும் மேற்பட்டோர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். களிமண் எடுக்க தடை நீடித்தால், மண்பாண்ட தொழிலே அழிந்துவிடும் சூழல் உள்ளது. எனவே, மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் இலவசமாக களிமண் எடுக்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்."

Tags

Next Story