மழையால் மண்பாண்ட தொழில் முடக்கம்; பொங்கல் பானை விலை உயரும்?
காஞ்சிபுரத்தில் மழை காரணமாக மண்பாண்ட தொழில் முடங்கியுள்ளதால், பொங்கல் பானை விலை அதிகரிக்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளன்று மண் பானையில் பொங்கலிட்டு, செங்கரும்பு, கொத்து மஞ்சள் வைத்து சூரியனை வழிபடுவர். பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இரு நாட்களாக மழை பெய்து வருவதால், மண்பானை தயாரிக்கும் பணி முடங்கி உள்ளதால், மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, திருக்காலிமேட்டை மண்பாண்ட தொழிலாளர் பி.சிவலிங்க உடையார் கூறியதாவது: ஆண்டு முழுதும் அகல்விளக்கு, போகி மேளத்திற்கான மண்தள ஓடு, பருப்பு சட்டி, என மண்பாண்ட தொழில் செய்தாலும், மார்கழி மாதத்தில் தயாரிக்கும் மண்பானையில் கிடைக்கும் மொத்த வருவாயில் மட்டுமே எங்களது குடும்பத்தினர் பொங்கல் பண்டியை உற்சாகத்துடன் கொண்டாட முடியும். காஞ்சிபுரத்தில் இரு நாட்களாக பெய்யும் மழையால், மண்பானை தயாரிக்கும் பணி முடங்கியுள்ளது. தயார் செய்துள்ள பச்சை பானையை சூளையில் தீயிட முடியாத சூழல் உள்ளது. கடந்த 1985ல் பொங்கல் நெருக்கத்தில்இதுபோல, மார்கழி மாதத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததால், தொழில் செய்ய முடியாமல் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்தது.
அதேபோல, 38 ஆண்டுகளுக்குப்பின் தற்போது பெய்து வரும் மழையால் எங்களது வாழ்வாதாரம் பாதித்து உள்ளது. ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளதால், இனி பொங்கல்பானை தயாரிக்க முடியாது. இதனால், நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பானை விலை 50 சதவீதம் விலை உயரும் சூழல் உள்ளது. எங்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையில், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழை நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.