கள்ளக்குறிச்சியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் மின்இணைப்பு துண்டிப்பு
மின் இணைப்பு துண்டிப்பு
கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் இருந்த மின் இணைப்புகள் அகற்றப்பட்டு, துண்டிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாசன வாய்க்கால் உள்ளது.
இந்த பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து 30 மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகளை 8 வாரத்திற்குள் அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த மே 16ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு நீர்வளத்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டினர். தொடர்ந்து, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், வாய்க்கால் இடத்தை அளவீடு செய்து,
இடித்து அகற்றப்பட வேண்டிய கட்டடத்தின் அளவு குறியீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் தங்களது கட்டடங்களை இடித்து அகற்றி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மின்வாரிய உதவி மின்பொறியாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், செல்வராஜ், ரமேஷ், மாரி, முருகேசன், முருகன் உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் இருந்த மின் இணைப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். மின்சார மீட்டர் பெட்டிகள் அகற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.