நீலகிரியில் மின் உற்பத்தி 20 சதவீதமாக குறைந்தது

நீலகிரியில் மின் உற்பத்தி 20 சதவீதமாக குறைந்தது

மேய்ச்சல் நிலமாக மாறியுள்ள அனைப்பகுதி

வேகமாக சரிந்து வரும் நீர் மட்டத்தால் நீலகிரியில் மின் உற்பத்தி 20 சதவீதமாக குறைந்தது.

தமிழகத்தின் தண்ணீர் தொட்டி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சமவெளியில் பாயும் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் மாயார், பவானி ஆகிய இரு ஆறுகளும் கோவை, ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்து, காவிரியுடன் கலந்து டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன.

இதேபோல் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதி இருப்பதால் ஆண்டில் சுமார் 100 நாட்கள் மழை பெய்கிறது. மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் மூலம் ஆண்டிற்கு சுமார் 1250 மி.மீ., மழை பெய்கிறது.

இதேபோல் மலை மாவட்டம் என்பதால் நீலகிரியில் அப்பர் பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர், முக்குறுத்தி, பைக்காரா, சாண்டி நல்லா, கிளன்மார்கன், மாயார், ஆகிய 13 அணைகள் உள்ளன.

இதில் பைகாரா மின் வட்டத்தில் முக்குறுத்தி நுன்புனல் மின் நிலையம், பைக்காரா நுன்புனல் மின் நிலையம், சிங்கார மின் நிலையம், மாயார் மறவக்கண்டி நுன் புனல் மின் நிலையம், பைக்காரா இறுதிநிலை புனல் மின் நிலையம் என 6 மின் நிலையங்கள் உள்ளன. குந்தா வட்டத்தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், அவலாஞ்சி, காட்டுக்குப்பம் என 6 மின் நிலையங்கள் உள்ளன. பைக்காரா மற்றும் குந்தா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலமாக 833 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வசதிகள் உள்ளன. இதன்படி வழக்கமாக தினசரி 400 முதல் 500 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு,

நீலகிரி மாவட்டத்துக்கு 100 மெகாவாட் பயன்படுகிறது. மீதமுள்ள மின்சாரம், ஈரோடு கிரீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்படுகிறது. தற்போது கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. நீலகிரியில் வரலாறு காணாத வகையில் 73 ஆண்டுகளுக்கு பிறகு 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. பருவமழை சரியாக பெய்யாததாலும் கோடை மழை பெரிய அளவில் கைகொடுக்காததாலும் நீலகிரியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. விவசாய நிலங்களும் கோடை மழையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அணைகளில் ஒன்றான 210 அடி உயரம் கொண்ட அப்பர் பவானியில் 50 அடியாக தண்ணீர் குறைந்து விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு குந்தா அணை வற்றி விட்டது. இதேபோல் எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட அணைகள் தண்ணீர் இன்றி கட்டாந்தரையாக காட்சி அளிக்கின்றன. பல்வேறு அணைகளின் நீர் வரத்து குறைந்து குளம், குட்டைகள் போல் காட்சி அளிக்கிறது. இதனால் நீலகிரி அணைகளில் மின் உற்பத்தி 80 சதவீதம் குறைந்து விட்டது. தற்போது 150 மெகாவாட் வரை மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுவும் பீக் அவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. இது நிலை தொடர்ந்தால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே நீலகிரி மாவட்டத்திலுள்ள அப்பர் பவானி, போர்த்தி மந்து ஆகிய அணைகளில் இருந்து குறைந்த அளவு கோவைக்கு குடிநீருக்கு மட்டும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. .....

Tags

Next Story