சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 6000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமார் 18 ஆயிரம் பேர் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இதை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு விசைத்தறியாளர் உள்ளிட்ட அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் இன்று வரை அந்த கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை எனவும், தற்போது விசைத்தறி தொழிலாளர்களுக்கு 50% கூலி உயர்வு வழங்கவேண்டும், விடுமுறை சம்பளம் நாளொன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 27 ஆம் தேதி முதல் விசைத்தறித் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8ஆவது நாளாக இன்று வேலை நிறுத்தம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்த போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ.1.8 கோடி வீதம் ரூ .8 கோடியே 64 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கூலி உயர்வு பிரச்னைக்கு உடனே தீர்வு காணவேண்டும் என விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.