செங்கல்பட்டில் சூறாவளி காற்றுடன் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தம்!!
power supply suspend
செங்கல்பட்டில் இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 8ம் தேதி முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை பெய்யும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு நகரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் குளிர் வானிலை காணப்பட்ட நிலையில், 6 மணியளவில் மிதமான மழை பெய்ய தொடங்கிய சிறிது நேரத்தில் தீவிரமடைந்தது. இடி, மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசி கனமழை கொட்டியது. மேலும், செங்கல்பட்டு பேருந்து நிலையம், புலிப்பாக்கம், பரனூர், வீராபுரம், உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கால்வாய்கள் வழியாக நீர்நிலைகளை சென்றடைந்தது. கனமழை காரணமாக வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. குடும்பத்தினருடன் வெளியே வந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி வீடு சென்று சேர்ந்தனர். செங்கல்பட்டு நகரில் அண்ணாநகர், அழகேசநகர், புதிய பேருந்து நிலையம் ரயில் நிலையம் மணிகூண்டு சின்னமணிகார தெரு, பரனூர், திம்மாவரம், ஆத்தூர், வல்லம், ஆலப்பாக்கம், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் பொத்தேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் சுமார் 1 மணிநேரத்திற்கு மழை பொழிவு காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால் செங்கல்பட்டு நகரம் இருளில் மூழ்கியது.