கூலி உயர்வு பெற்றுதரக்கோரி விசைத்தறியாளர்கள் மனு.
கூலி உயர்வு பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:& கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சாதா விசைத்தறிகள் உள்ளது.
இதில் 90 சதவீதம் விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் தொழில் செய்து வருகிறோம். கடந்த ஆண்டுகளில் மின் கட்டண உயர்வு, கூலி உயர்வு, விசைத்தறி தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்கும் (அச்சு பிணைத்தல், இழை வாங்குதல், ஒர்க்ஷாப், வேன் வாடகை, நாடா பட்டறை) செலவினங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தொழில் செய்ய முடியாத நிலையும் தொழில் செய்து வருகிறோம். இதுபோல் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. எனவே தொழிலாளர்களுக்கு விலை வாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு கொடுத்தால் தான் தொழிலாளர்களை தக்க வைக்க முடியும். விசைத்தறி தொழிலை தொடர்ந்து நடத்த முடியும்.
வழக்க 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் தற்போது சரியான கூலி உயர்வு பெற்று 11 ஆண்டுகள் ஆகி விட்டது. கடந்த 2014&ம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்களுக்கு கொடுத்து நடைமுறைப்படுத்தாமல் இருந்து வருகிறார்கள். இதன் பின்னர் போராட்டம் நடத்தினால் ஒரு மாதம் கொடுப்பது, பின்னர் நிறுத்துவதுமாக இருந்து வருகிறது. எனவே கடந்த 2022&ல் ஆன ஒப்பந்தத்தில் இருந்து சோமனூர் ரகத்திற்கு 60 சதவீதம், இதர மற்ற பகுதி ரகங்களுக்கு 50 சதவீதம் புதிய கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தக்கூலி உயர்வை குறைத்து வழங்காமலும், சட்டப்படியான நடவடிக்கை எடுத்து லட்சக்கணக்கான குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.