உடல் நலக்குறைவால் பங்கேற்க முடியாத பிரபுதேவா: பெற்றோர் வாக்குவாதம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடன மாஸ்டர் பிரபு தேவாவின் 100 பாடல்களுக்கு குழந்தைகள், பெரியவர்கள் என நிமிடங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் "நம்ம மாஸ்டர்" என்ற பெயரில் நடனம் ஆடி உலக சாதனை நிகழ்வு படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக, சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெங்களூரு அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்தும் கூட தனி நபர்களாகவும் நடன குழுக்களை சேர்ந்தவர்களும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என்று அடிப்படையில் ஒரு தொகையினை கட்டி பதிவு செய்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். காலை ஐந்து மணியிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காக குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் தயாராகி ராஜரத்தினம் மைதானத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு குடிநீர் குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆனால் கோடை காலம் என்பதால் ஏழு மணிக்கு அதிகப்படியான வெயிலின் தாக்கம் இருந்தது.
குழந்தைகள் நடனம் ஆடுவதற்காக நிற்கவைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் வெயில் இருந்ததால் குழந்தைகள் பலரும் சோர்வடைந்தனர். பெற்றோர்கள் சிலர் குழந்தைகளுக்காக தங்கள் உடமைகளை வெயில் படாமல் அவர்களையும் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி நடன கலைஞர் பிரபு தேவா கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஏழு மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்த நிலையில், நடனக் கலைஞர் பிரபுதேவா வருவதற்கு தாமதமாகி கொண்டே சென்றது. சற்று நேரத்தில் வந்து விடுவார் என்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தெரிவித்துக் கொண்டிருந்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள். பின்னர் பெற்றோர்கள் ஒரு சிலர் குழந்தைகள் அதிகப்படியான நேரம் கடும் வெயிலில் சிரமப்படுவதாகவும், முறையான ஏற்பாடு இன்றி நேரத்திற்கு வராத ஒருவருக்காக குழந்தைகளை வெயிலில் இப்படி நிற்க வைத்ததற்கு கடும் கோபத்துடன் கண்டனக் குரல்களை எழுப்பினர். பெற்றோர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு நிகழ்ச்சியை தொடங்கினர். பிரபுதேவாவுக்கு அப்போதுதான் உடல்நிலை குறைவு இருப்பதால் அவரால் வர இயலவில்லை அதனால் தான் தாமதம் ஆகிறது என்றும் வீடியோ காலில் அவர் இணைந்து கொள்வார் என்றும் பின்னர் தெரிவித்தனர். நிகழ்ச்சி தொடங்கிய பின்னர் சிறிது நேரம் கழித்து வீடியோ காலில் இணைந்த பிரபுதேவா மிகவும் வருத்தத்துடன் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு வர இயலவில்லை என்று அதற்காக மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார், இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தான் ஒப்புக்கொண்டு வராமல் இருந்ததில்லை இந்த முறை வராமல் போனதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை என்றும் வருந்தினார்.