பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் துவக்கம்

பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் துவக்கம்

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வில் பங்கேற்ற மாணவிகள்

சேலத்தில் நேற்று நடந்த பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 1-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரையும், பிளஸ்-1 தேர்வுகள் மார்ச் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரையும் நடைபெறுகிறது. இதையொட்டி பிளஸ்-2, பிளஸ்-1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்தாண்டு 35,758 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் நேற்று பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கியது. இத்தேர்வில் 23,379 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். செய்முறை தேர்வு பணிகளை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதாவது, செய்முறை தேர்வுக்கு தேவையான ஆய்வக பொருட்கள் போதுமானதாக இருப்பு உள்ளதா? என்றும், மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். அப்போது தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து குளறுபடி இன்றி செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை பிளஸ்-1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தவும், அதற்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story