தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை - சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நெய்தல் படை அமைக்கப்பட்டு இந்திய மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என பிரசாரத்தின் போது சீமான் பேசினார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாமக்கல் மாவட்டம் பரமத்தி- வேலூர், நாமக்கல், இராசிபுரம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தொடக்கமாக, பரமத்தி-வேலூரில் தமது கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் திறந்தவெளி வேனில் நின்றபடி, தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பேசிய சீமான், மக்களுக்கான அதிகாரம் தற்போது அமைகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நெடுங்காலமாக பெரும் முதலாளிகளின் வளர்ச்சிக்காகவே அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உழைக்கும் அடித்தட்டு மக்களின் உணர்வு, உரிமை மதிக்கப்படுவதில்லை. விவசாய பெருமக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மத்திய பாஜக அரசு வேளாண் விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடந்தது. ஸ்டாலின் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை போட்டு நடவடிக்கை எடுத்தார்.

திமுக, அதிமுக, பாஜக ஆகிய எந்தக் கட்சிகளும் விவசாயிகளின் வளர்ச்சியைக் கண்டு கொள்ளவில்லை. உலகிற்கு வேளாண்மை, தொழில்நுட்பம், போன்றவற்றை கற்றுத் தந்தவர்கள் தமிழர்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் நாட்டில் பசுமை வளத்தை பெருக்க தவறிவிட்டனர். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் பசுமை பார்வையாக மாற்றப்படும். மேலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நெய்தல் படை அமைக்கப்பட்டு இந்திய மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

செவிலியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் வீதிக்கு வந்து போராடும் நிலைமையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திவிட்டனர். ஆனால் மது விற்பனைக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழ்நாடு அரசு துறைகளில் அனைத்து துறைகளும் ஊழல் நிறைந்து திறனற்ற அரசாக காணப்படுகிறது. மத்திய மாநில அரசுகளில் உள்ள பிரதமர், முதல்வர், அமைச்சர்களின் பாதுகாப்புக்காக அதிக செலவு செய்யும் அரசுகள், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில்லை. திராவிட கட்சிகளோடு பல கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காகவே கூட்டணி வைக்கின்றனர். 7 விழுக்காடு ஓட்டு மட்டுமே உள்ள நாம் தமிழர் கட்சி தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறது. கனிம வளங்களை சுரண்டி ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களை ஆதரிக்கக் கூடாது. சத்தியத்தின் பாதையில் செல்லும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் சகோதரி கனிமொழி வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு செல்வார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக. ஜிஎஸ்டி கொண்டு வந்ததும் காங்கிரஸ்தான். ஆள் தூக்கி சட்டங்களை கொண்டு வந்ததும் காங்கிரஸ்தான். ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, மது விற்பனை, கஞ்சா விற்பனை இந்த கட்சி ஆட்சியில் தான் நடைபெறுகிறது. இதுவே சாத்தானின் ஆட்சியாகும். எனவே இந்த அநீதிக்கு யாரும் துணை நிற்கக்கூடாது. நாம் தமிழர் சின்னத்தை தராமல், எங்களை தேர்தலில் போட்டியிடச் சொல்கிறார்கள். சத்தியத்தின் பாதையில் செல்லும் நாங்கள் எந்த சின்னத்தில் இருந்தாலும் வெற்றி பெறுவோம். ஒலிவாங்கி சின்னத்தில் ஆதரியுங்கள்.

புதிய சிந்தனைகளோடு புரட்சியாவாதிகளாக நாங்கள் கடமையாற்றுகிறோம். எங்களிடம் பணம் இல்லை. மானமுள்ள இனத்தோடு தேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம். நம்பி வந்தவர்களை வாழ வைத்த தமிழ் சமுதாயம் சொந்த பிள்ளையை வாழ வைக்க வேண்டும். கனிமொழி பொறியாளர் அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க வந்துள்ளோம். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்பார். கருணாநிதியின் மகள் கனிமொழியா சீமானின் தங்கை கனிமொழியா என்று பார்த்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். ஒருமுறை வாய்ப்பு அளித்து சோதித்துப் பாருங்கள். மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூரில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

தொடர்ந்து இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story