வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
வாக்குப்பதிவு
தமிழ்நாடு முழுவதும் நாளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். நாளை பதிவாகும் ஓட்டுகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளது.
நேற்று வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்ததது. தேர்தல் அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான ஆவணங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர், ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், அவிநாசி என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதன்படி பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 2,60,249, ஊட்டி தொகுதியில் 1,95,631 பேரும், கூடலூர் தொகுதியில் 1,92,282 பேரும், குன்னூர் தொகுதியில1,88,929 பேரும், மேட்டுபாளையம் சட்டமன்ற தொகுதியில் 3,05,406 பேரும், அவிநாசி தொகுதியில் 2,85,755 பேர் என நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 14,28,252 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியலின் படி நீலகிரி தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயரை மட்டுமே பதிவு செய்ய முடியும். இதனால் 16 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா 17 என பட்டன்கள் அமைக்க, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி இரு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், தலா ஒரு கட்டுபாட்டு கருவிகள், வி.வி.பேட்., என மொத்தம் 7 ஆயிரத்து 942 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் வேட்பாளர்கள் புகைப்படம் மற்றும் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கபட்டன.
இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே கணினி மூலம் சீரற்றமயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று போலீஸ் பாதுகாப்புடன் சட்டமன்ற தொகுதியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வீல்ச்சேர் உள்பட அனைத்து பொருட்களும் அதே வாகனத்தில் அனுப்பப்பட்டன. நீலகிரி தொகுதியில் உள்ள 1619 வாக்கு சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிக்குள் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேர்தல் பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உட்பட 1680 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் ஊட்டி சாந்தி விஜயா பள்ளி உள்பட நீலகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களில் மாதிரி வாக்கு சாவடி மற்றும் மூன்று இடங்களில் பெண்கள் வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் வாக்கு சாவடி மையங்களுக்கு பொருள்கள் அனுப்பும் பணியை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 689 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஊட்டி, குன்னூர், கூடலூர், பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவிநாசி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய ஊட்டி நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட 1619 வாக்கு சாவடிகள் 809 இடங்களில் உள்ளன. நீலகிரி தொகுதியில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுன் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வெப் கேமரா மற்றும் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்படும். இந்த இடங்களுக்கு சென்று கண்காணிக்க 178 மண்டல குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகளில் வனத்துறையினர் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லவும், வாக்காளர்களை அழைத்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் பணியாளர்கள் அங்கு தங்கும் போது அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதேபோல் குடிநீர், சாமியான பந்தல் உள்பட, வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரியில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் வாக்குச்சாவடிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. வாக்குப்பதிவு நாளன்று சுற்றுலா தளங்கள் வழக்கம் போல செயல்படும். போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர்களை அழைத்துச் செல்ல வாகன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.