சேலம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
ஜெர்மன் ரோபோ தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வாழப்பாடியைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் கிருத்திகா கந்தசாமி ஏற்பாட்டில் ரோபோட்டிக்ஸ் ஆப் தமிழ்நாடு மற்றும் கோவை பிக்போதி அகடமி, வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 50 மாணவர்களுக்கு ரோபோ தொழில்நுட்பம் குறித்த அடிப்படை இயக்கும் முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் ரோபோ செயலியக்க காட்சி நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரவீந்திரன் வரவேற்றார். கணினி ஆசிரியர் ஸ்ரீமுனிரத்தினம் செயல் திட்டம் குறித்து அறிமுகம் செய்தார்.
வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், ரோபோடிக் என்ஜினீயர் கிருத்திகா கந்தசாமி, பிக் போதி அகடமி செயல் அதிகாரி சாந்தகுமார், அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், தேவராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டி சான்றிதழ், மற்றும் பரிசுகளை வழங்கினர்.