கோடையில் விளைச்சல் குறைவால் காய்கறிகளின் விலை உயா்வு

கோடையில் விளைச்சல் குறைவால் காய்கறிகளின் விலை உயா்வு

காய்கறிகளின் விலை உயா்வு

கோடையில் விளைச்சல் குறைந்துள்ளதால், திருச்சி சந்தைகளில் காய்கறிகளின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.
திருச்சி காந்தி சந்தை, உறையூா் சந்தை உள்ளிட்ட சந்தைகளுக்கு வெளிமாநிலங்கள், வெளியூா்களில் இருந்து தினந்தோறும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு, திருச்சி மாவட்ட வியாபாரிகளுக்கு சில்லறை மற்றும் மொத்த விலைகளில் விற்கப்படுவது வழக்கம். கடந்த இரு வாரங்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் வெப்பம் பதிவாகி வருவதால், தண்ணீரின்றி காய்கறிகளின் விளைச்சல் குறைந்து, வரத்தும் குறைவாகவே உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து காந்தி சந்தை காய்கறி வியாபாரிகள் சந்திரசேகரன், கமலக்கண்ணன் ஆகியோா் கூறியதாவது: திருச்சி சந்தைகளுக்கு கா்நாடக மாநிலம் பெங்களூா், மங்களூா், ஆந்திரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் வரத்து உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக கோடை வெப்பம் அதிகளவில் இருப்பதால், தண்ணீரின்றி காய்கறி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, திருச்சி காந்தி சந்தையில் காய்கறிகளின் விலையானது ரூ. 10 முதல் ரூ. 30 வரை அதிகரித்துள்ளது. திருச்சி காந்தி சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனையான காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) (அடைப்புக்குறிக்குள் பழைய விலை): தக்காளி - ரூ. 28 (20); உருளைக்கிழங்கு - ரூ. 38 (30); பீட்ருட் - ரூ. 35 (25) ; சௌசௌ - ரூ. 30 (20); முட்டைகோஸ் - ரூ. 30 (20); கொத்தவரங்காய் - ரூ. 30 ( 20); பீன்ஸ் - ரூ. 90 (60); வெண்டைக்காய் - ரூ. 50 (30); கத்திரிக்காய் - ரூ. 50 (20); முள்ளங்கி - ரூ. 30 (20); மாங்காய் - ரூ. 40 (30); எலுமிச்சைப்பழம் (ஒன்று) - ரூ. 8 (5); முருங்கைக்காய் - ரூ. 30 (30); அவரைக்காய் - ரூ. 60 (60); வெங்காயம் பெரியது - ரூ. 25 (25); வெங்காயம் சிறியது - ரூ. 40 (40).

Tags

Next Story