ராஜபாளையத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் சார்பில் மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்யக் கோரி தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இராஜபாளையம் ஒன்றிய டிட்டோஜாக் நிர்வாகிகள் கூறியதாவது: தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90% ஆசிரியர்களின் பதவி உயர்வை வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்டக் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக் கொண்டு காணொளி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தெரிவித்த எமிஸ் பதிவேற்றத்தில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க மூன்று நபர் குழுவின் மூலம் தீர்வு காண வேண்டும்.உயர்கல்வி பயின்றவர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்க வேண்டும்.பதவி உயர்வுக்கு பணி மூப்பு மட்டுமே போதும்.

தகுதித் தேர்வு தேவையில்லை என்ற மாநில அரசின் கொள்கை முடிவை நீதிமன்றம் மூலம் நிலைநாட்ட வேண்டும்.இதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி விரைவில் தீர்வு காண வேண்டும்.எண்ணும் எழுத்தும் ஆன்லைன் பதிவேற்றம் தேவை இல்லை.

ஆசிரியர்களை கருத்தாளர்களாக அனுப்புவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப் பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் மாவட்டத் தலைநகரங்களில் ஜனவரி 27 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த 200- க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்..

Tags

Next Story