சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய பிரதமர்

சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய பிரதமர்

ரயில்வே மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டிய மோடி 

சிவகாசியில் திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை - செங்கோட்டை அகல ரயில் பாதையில் சிவகாசி வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை - குருவாயூர், செங்கோட்டை மயிலாடுதுறை, சென்னை - கொல்லம், மதுரை - செங்கோட்டை, சிலம்பு எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அகல ரயில் பாதையில் சிவகாசி - விருதுநகர் சாலையில் திருத்தங்கல் ரயில்வே கிராசிங், சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் ஆகியவற்றில் மேம்பாலம் இல்லாததால் ரயில்வே கேட் மூடப்படும் போது இரு புறங்களிலும் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் ஒவ்வொரு முறையும் ரயில் சென்ற பின் போக்குவரத்து சீராக சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் சிவகாசி மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க கடந்த 2021ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் சிவகாசி சாட்சியாபுரம் மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தொடங்கப்படவில்லை. சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சாட்சியாபுரத்தில் மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு, தெற்கு ரயில்வே சார்பில் ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டது. சிவகாசி இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் வரை ரூ.60 கோடி மதிப்பில் 700 மீட்டர் நீளம், 12 அகலத்தில் சுரங்கப்பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. ஆனால் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் விருதுநகர் - தென்காசி இடையிலான ரயில் பாதையில் திருத்தங்கல் கிராசிங்(424), சிவகாசி சாட்சியாபுரம் கிராசிங்(427) ஆகியவற்றில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் காணொலி காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். சிவகாசி மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ஒரே நேரத்தில் நாட்டப்பட்டது சிவகாசி மக்கள் மற்றும் வர்த்தகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story