பிரதமர் மோடி ஆணவம்,அகம்பாவம்,கர்வம் கொண்டவராக உள்ளார் - வைகோ
கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் மதிமுக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது .இந்தியா கூட்டணியின் கோவை மக்களவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் 19ம் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகம் முதல் கட்டத்தில் இருக்கின்றது.கோவையில் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் அடுத்த 48 மணி நேரத்தை வாக்கு சேகரிப்பிற்காக ஈடுபட்டு சனாதன,இந்துத்துவா சக்திகளை சாய்போம் என தெரிவித்தார். டெல்லியில் இந்தியா கூட்டணி பெயர் வைக்கும் முன்பு கூட்டம் நடத்தப்பட்டது
அப்போது அனைவரையும் ஒருவரை தேடி சென்று வணக்கம் சொன்னார்கள் அவர்தான் முதல்வர் ஸ்டாலின் என தெரிவித்த அவர் ஒன்பது முறை பிரதமர் தமிழகத்திற்கு வந்து இருக்கின்றார் இதற்கு காரணம் திராவிட இயக்கம் என தெரிவத்தார்.திராவிட இயக்கத்தை அழிக்க போவதாக மோடி சொல்கின்றார் மோடியை மரியாதையோடு கேட்கின்றேன் 130 கோடி தலைவராக இருக்க வேண்டியர் நாகரீகத்தோடு பேச வேண்டும் தெருவோரத்தில் இருப்பவரை போல பேச கூடாது என தெரிவித்தார். திராவிட இயக்கம் நூறாண்டு கடந்த இயக்கம் எனவும் திராவிட இயக்கம் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக துவங்கியது என்றவர் ஏராளமானவர்கள் இதற்காக உயிரை துறந்ததாகவும் திராவிட இயக்கத்தை காக்க உயிரை கொடுத்து சிறை சென்றார்கள் என தெரிவித்தார்.
இந்திதான் ஆட்சி மொழி என்று முதல்வராக பக்தவச்சலம் சொன்னதை எதிர்த்து சின்னசாமி தன் உயிரை மாய்த்து கொண்டார். தியாக பூமியாம் தமிழகத்தில் உங்களால் எதையும் திணிக்க முடியாது என தெரிவித்த அவர் சமீபத்தில் நடந்த சனாதானிகள் கூட்டத்தில் ஒரு பிரகடனம் விடுக்கப்பட்டது.இனி இந்தியா என அழைக்க கூடாது பாரத் என அழைக்க வேண்டும்,முஸ்லீம்களுக்கு பிரஜை என்று அந்தஸ்த்து கிடையாது,இலங்கை தமிழர்களுக்கும் வாக்குரிமை கிடையாது என்பதுதான் அந்த பிரகடனம் என தெரிவித்தார். 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதால் பிரதமர் ஒன்பது முறை வந்துள்ளார் என்றும் 9 முறை அல்ல 100 தடவை கூட வரட்டும் என தெரிவித்தார்.தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை பார்த்து அதை கனடாவின் பிரதமரும் செயல்படுத்துகின்றனர் எனவும் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு முதல்வர் பணியாற்றி வருகின்றார் என தெரிவித்தார்.
வெளிநாடுகளில் 9.5 லட்சம் கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார் இதன் மூலம் லட்சகணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். இப்போது இருப்பவர் ஏதேதோ பேசுகின்றார் அவர் ஐபிஎஸ் படித்தாரா? அதை எங்காவது எடுத்துக்கொண்டு வந்தாரா?திராவிட இயக்கத்தை ஒழித்து கட்டி விட்டுதான் வேலை என்கின்றார். உங்களால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார்.நான் நிறைய பிரதமர்களை பார்த்துவிட்டேன்.இப்போது உள்ள ஆணவம் கொண்ட பிரதமர் போல் நான் பார்ததது கிடையாது. நாடாளுமன்றத்திற்கு தன்னை கலைஞர் அனுப்பி வைத்தார் என்றும் வாஜ்பாய் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது மூன்று மாதத்திற்கு ஒரு முறை டெல்லி செல்வேன் எனவும் பழக்கூடையை வைத்து விட்டு பார்த்து விட்டு்வருவேன் என பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
பிரதமர் மோடி ஆணவம்,அகம்பாவம்,கர்வம் கொண்டவராக இருப்பவர் என தெரிவித்த வைகோ தி.க,திமுக,அதிமுக, மதிமுக இவை எல்லாம் சேர்ந்ததுதான் திராவிட இயக்கம் எனவும் முதல்வர் எவ்வளவு பொறுமையாக நிதானமாக பேசுகின்றார் எனவும் தெரிவித்தார். மோடி அடுத்து நாட்டை ஆளப்போகின்றோம் என்ற மனப்பால் குடித்து கொண்டு இருக்கின்றார் எனவும் என்னபாடு பட்டாலும் இந்த முறை ஆட்சிக்கு வர முடியாது இதற்கு தமிழகம் முன்னுதரணமாக இருக்கும் எனவும் கேரளா,மேற்கு வங்கம், ஹரியானா,உ.பி என எங்கும் பா.ஜ.கவால் வரமுடியாது என தெரிவித்தார்.இந்த கோவை நகரம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற நகரம் எனவும் இங்குள்ள வாக்காளர்கள் ராஜ்குமாருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.