பிரதமர் மோடி ஊட்டி வருகை: கண்காணிப்பு பணிகள் தீவிரம்
போலீசார் தீவிர சோதனை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் கட்சியினர் பம்பரமாக சுற்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சித் தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் பிரபலங்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முறை ஓட்டு வங்கியை அதிகரித்து குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற பா.ஜ.க., தீவிர முனைப்புக் காட்டுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒரு மாதத்தில் 4 முறை தமிழகம் வந்து சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையை ஆதரித்து கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடந்தது. இதற்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் பா.ஜ.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும்,
பா.ஜ.க., வேட்பாளர்களுக்காகவும் பிரதமர் நரேந்திரமோடி வாக்கு சேகரிக்க வரும் 9ம் தேதி தமிழ்நாடு வருகிறார். வேலூர், தென் சென்னை, நீலகிரி, கோவை, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய 6 நாடாளுமன்ற தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதன்படி வருகிற 10ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரோடு ஷோ நடத்தவும், கோவையில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
பிரதமர் வருகையையொட்டி நீலகிரி முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- பிரதமரின் வாகன பேரணி நடைபெறும் அளவுக்கு ஊட்டியில் சாலை வசதி இல்லை. மேலும் பிரதமர் வருகையை எதிர்கொள்ளும் அளவுக்கு போலீஸாரும் இங்கு கிடையாது. இங்குள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அதனால் பிரதமர் வருகை இதுவரை உறுதியாகவில்லை. ஒருவேளை பிரதமர் வருகை உறுதியாகிவிட்டால், அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கும் விடுதிகளுக்கு வருகிற பத்தாம் தேதி வரை வருபவர்களின் விவரங்கள் ஆதார் கார்டு நகல் சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.