முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்டப்பதிவு சிறப்பு முகாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டப்பதிவு சிறப்பு முகாமில் இராஜேஸ்குமார் எம்.பி அட்டைகளை வழங்கினார்

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். முகாமை இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்து, 16 நபர்களுக்கு காப்பீட்டு அட்டை பெறுவதற்கான ஆணைகளை வழங்கி, பேசியதாவது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நுற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பு முகாம்கள் அமைத்தல், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குதல், முத்தமிழறிஞர் கலைஞரின் சிறப்பை எடுத்து விளக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ”முத்தமிழ்த்தேர்” என பல்வேறு வகையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞர் இந்தியாவில் முதல் முறையாக கட்டணமில்லாமல் 2008 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தார்.

குறிப்பாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, மகளிர் இலவச பேருந்து பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகள் பயில 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுவீட்டு திட்டங்களை செயலாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முள்ளுகுறிச்சி, மல்லசமுத்திரம், மாமுண்டி ஆகிய இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு பதிவு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்தார். இம்முகாமில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட மேலாளர் செல்வி மணிமொழி, மாவட்ட திட்ட மேலாளர் (முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்) எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ராதாகிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story