ராணிபேட்டை : தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுத்தேர்வு தொடர்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆசிரியர் தேர் வாரியம் துணை இயக்குநரும், மாவட்ட பொதுத்தேர்வுப்பணி கண்காணிப்பு அலுவலருமான திருவளர்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு, ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கி பேசும்போது,
பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ளது. எனவே, தேர்வுக்கான இறுத்திக்கட்ட பணியில் உள்ளீர்கள். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நமது பள்ளி சிறப்பான தேர்ச்சி சதவீதம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுங்கள். மாணவர்களை செய்முறை தேர்வுகளை நன்றாக செய்ய அறிவுறுத்துங்கள். ஒவ்வொரு மாணவர்களையும் தனித்துவமான கவனித்து, மதிப்பெண் குறைவாக எடுப்பவர்களுக்கு தனி கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு நாளும் மாணவனுக்கு அளிக்கும் தேர்வுகளில், கடந்த தேர்வை விட இந்த தேர்வில் கூடுதலாக மதிப்பெண் எடுக்க வைக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுத்தேர்வு முடித்து மாணவர்கள் உயர்க்கல்வி செல்வதற்கான உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
உயர்க்கல்வி வேண்டாம் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணாக தவிர்க்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தொழிற்கல்வியை கற்க வேண்டும் என்று உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் அவர்களின் கற்றல் திறனிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும், பள்ளிகளில் பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி மற்றும் உயர்க்கல்விக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் ஆகிய இரண்டையும் இலக்காக வைத்து நீங்கள் செயல்பட வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் இன்றைய காலத்தில் சினிமாவை பாா்த்து வாழ்க்கை முடிவு செய்கிறார்கள்.
அது வாழ்க்கை இல்லை என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தும். அதற்கு முன்பாக நாம் அவர்களுக்கு வாழ்க்கை எது என்பதை உணர்த்த வேண்டும். மேலும், தோல்வி அடையாமல் வெற்றி பெறவும், தோல்வி அடைந்தாலும் வெற்றிக்கான வழி என்ன என்று இரண்டையும் மாணவர்களுக்கு நீங்கள் சொல்லித்தர வேண்டும்’. இ்வ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கடந்தாண்டு பள்ளி அளவில் சிறப்பான தேர்ச்சி சதவீதம் கொடுத்த தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை ஆட்சியர் வளர்மதி வழங்கினார். இதில், தொடக்கக்கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி (இடைநிலை), பிரேமலதா (தொடக்கக்கல்வி), மோகன் (மெட்ரிக்) மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.