புறா வளர்ப்பில் முன் விரோதம் - ஒருவர் வெட்டி கொலை
ஞானசேகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையன் குளத்தை சேர்ந்தவர் ஞானசேகர். 27 வயதான இவர், ராஜபாளையம் அருகே தெற்கூர் செல்லும் வழியில் உள்ள கோதை நாச்சியார் புரத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது செங்கல் சூளையில் கோதை நாச்சியார் புரத்தை சேர்ந்த முருகராஜ் என்பவர் தனது மகன் மணிகண்டன் மற்றும் மனைவியுடன், சூளையில் உள்ள அறையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் தங்கியிருந்த சூளை அறையின் மாடியில் முருகராஜ், இவரது மகன் மணிகண்டன் ஆகியோர் புறாக்களை வளர்த்து வந்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முருகராஜ் சரியாக வேலை செய்யவில்லை என கூறி ஞானசேகர் திட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகனை அழைத்துக் கொண்டு முருகராஜ் வேறு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று விட்டார். அவர்கள் வளர்த்த புறாக்களை அங்கேயே விட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தான் வளர்த்த புறாக்களை எடுத்துச் செல்வதற்காக மணிகண்டன் ஞானசேகர் செங்கல் சூளைக்கு வந்துள்ளார். ஆனால் அங்கு புறாக்களை காணவில்லை. இது குறித்து ஞானசேகரிடம் கேட்டதற்கு, பராமரிக்க இயலாதலால் புறாக்கள் பறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தனது புறாக்கள் மீண்டும் கிடைக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக ஞானசேகரை, மணிகண்டன் மிரட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு விறகு பாரம் இறக்குவதற்காக ஞானசேகர் தன்னுடைய செங்கல் சூளைக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் தனது நண்பர்கள் நாகராஜ் மற்றும் பேச்சிமுத்து ஆகியோரை அழைத்துக் கொண்டு மாடியில் உணவு அருந்தி கொண்டிருந்த ஞானசேகரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினார்.
விறகு பாரம் இறக்க வந்த டிராக்டர் ஓட்டுனர் முனியசாமி என்பவர் அளித்த தகவலின் பெயரில் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஞானசேகர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஞானசேகரின் தந்தை பாக்கியநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தப்பி ஓடிய மூன்று குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர். இறந்த ஞான சேருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.