தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி - தேர்தல் அலுவலர்
ஆட்சியர் ஜெயசீலன்
விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் அச்சு ஊடகங்கள், உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் வாயிலாக அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், அவர்தம் முகவர்களால் வாக்கு சேகரிக்க செய்யப்படும் விளம்பரங்களுக்கு முறையான அனுமதி வழங்கிடவும், விளம்பரங்களைக் கண்காணித்து வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்கில் சேர்த்திடவும் மாவட்ட அளவில் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, வாக்குப் பதிவிற்கு முந்தைய நாளான 18.04.2024 அன்றும், வாக்குப் பதிவு நாளான 19.04.2024 அன்றும், அச்சு ஊடகங்களில் (தினசரி அச்சு ஊடகங்களில்) தேர்தல் சம்மந்தமான விளம்பரங்கள் வெளியிட விரும்பும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அவர்தம் முகவர்கள் இரண்டு நாட்களுக்கு (48 மணி நேரம்) முன்னதாக மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முறையான முன்அனுமதியினை பெற்ற பின்னர் வெளியிட வேண்டும். மேலும், அச்சு ஊடக நிறுவனங்கள் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி சான்றிதழ்(Pre certification) இருப்பதை உறுதி செய்து கொண்டு அச்சான்றிதழ் அனுமதி எண்ணை விளம்பரத்தில் வெளியிட வேண்டும்.
மேற்கண்ட இரண்டு நாட்களில்(18.04.2024 மற்றும் 19.04.2024) அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட விரும்புவோர் இரண்டு நாட்களுக்கு (48 மணி நேரம்) முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும், ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) விண்ணப்பித்து முன் அனுமதி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். விளம்பரங்களை வெளியிடும் அச்சு ஊடக நிறுவனங்களும் இந்த நடைமுறையினைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
18.04.2024 அன்று தேர்தல் சம்மந்தமான விளம்பரங்கள் வெளியிட விரும்பும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அவர்தம் முகவர்கள் 16.04.2024 அன்று மாலை 07.00 மணிக்குள்ளும், 19.04.2024 அன்று தேர்தல் சம்மந்தமான விளம்பரங்கள் வெளியிட விரும்புவோர் 17.04.2024 அன்று மாலை 07.00 மணிக்குள்ளும் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேற்கண்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அவர்தம் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இதனைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது உரிய விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்கள்.