ராசிபுரம் தமிழ்க் கழகம் சார்பில் பரிசுகள் வழங்கும் விழா

ராசிபுரம் தமிழ்க் கழகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தமிழக் கழகம் சார்பில் முதல் கூடுகை மற்றும் அரசுப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா 24.5.24 அன்று நடைபெற்றது. ராசிபுரம் சுத்த சன்மார்க்க சங்க அரங்கில் நடைபெற்ற விழாவில் ராசிபுரம் தமிழ்க் கழக நிறுவனர் பி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளிகளின் துணை ஆய்வாளரும், தமிழ்க்கழக செயலாளருமான கை.பெரியசாமி வரவேற்றுப் பேசினார். வள்ளலார் சுத்த சன்மார்க்கச் சங்கத் தலைவர் கே.எம்.நடேசன், நல்லாசிரியர் பெ.செளந்திரராஜன், நாமக்கல் தமிழ்ச் சங்கச் செயலர் கோபாலநாராயண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரி இணைப்பேராசிரியர் க.செல்வராசு, தமிழ்ச் சங்கப் பேராசிரியர் சி.ரத்தினம், ஒ.செளதாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சு.குமரன், மக்கள் தன்னுரிமைக் கட்சியின் நிறுவனர் நல்வினைச் செல்வன், நாமக்கல் பள்ளித் துணைஆய்வாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் ப.சின்னுசாமி, தமிழ்க் கழக துணைச்செயலர் மா.இருசப்பன், இரா.தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவில் பேசினர். இவ்விழாவில் தருமபுரி கம்பன் கழகச் செயலாளர் தகடூர் ப.அறிவொளி தமிழ் எங்கள் உயிருக்கு நேர், செ.அ.மொய்குழலி அறம் வளர்த்த தமிழ் என்றத் தலைப்பிலும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர். மேலும் இவர்கள் பேசும் போது திருக்குறள் மட்டும் தமிழில் பெருமைகள் குறித்து அனைவரிடத்திலும் எடுத்து கூறினர். விழாவில் 10, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கு சால்வை அணிவித்து பரிசளித்து கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் யோகா பயிற்சி, முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகள் எடுத்துக் கூறி அதன் செயல்முறைகளை பொதுமக்களிடத்தில் செய்து காட்டி விளக்கம் அளித்தனர். மேலும் பரதநாட்டியம், திருக்குறள் போட்டி, தொடர்ந்து திருவள்ளுவர் பாரதியார் போன்ற வேடமடைந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பேச்சாளர்களின் பேச்சரங்கம், கழிவறை சுத்தம் செய்யும் பெண்களுக்கு உடை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முடிவில் ராசிபுரம் தமிழ்க் கழகப் பொருளாளர் வீ.ரீகன் நன்றி கூறினார். மேலும் விழா நிறைவில் அனைவருக்கும் உணவு வழங்கி சிறப்பித்தனர்.

Tags

Next Story