தஞ்சை தொகுதியில் அதிக வாக்கு வாங்கித் தரும் மாவட்ட செயலாளருக்கு பரிசு

தஞ்சை தொகுதியில் அதிக வாக்கு வாங்கித் தரும் மாவட்ட செயலாளருக்கு பரிசு

கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் அதிகமாக வாக்கு வாங்கித் தரும் திமுக மாவட்ட செயலாளருக்கு 6 பவுன் செயின் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளருக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் அதிகமாக வாக்கு வாங்கித் தரும் திமுக மாவட்டச் செயலாளருக்கு 6 பவுன் செயின் பரிசளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் திங்கள்கிழமை திமுக வேட்பாளர் முரசொலியை கூட்டணி கட்சியினருக்கு அறிமுகப்படுத்தும் கூட்டமும் மற்றும் திமுக கட்சி செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்து கட்சி மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி தமிழ்நாட்டிலேயே 4 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் தேர்தலில் களப்பணியாற்ற வேண்டும். பா

ஜக அறிவித்துள்ள வேட்பாளர்கள் தமிழக அளவில் 7 வேட்பாளர்கள் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து களம் காண பயம் கொண்டு தாங்களாகவே விலகிக் கொண்டுள்ளனர். இதுவே பாஜகவுக்கு முதல் தோல்வியாகும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வாய் கூசாமல் மகளிருக்கு திமுக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாயை மத்திய அரசு தான் வழங்குகிறது என்றும், அதை நாங்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம் என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுத்தரும் மாவட்ட செயலாளருக்கு தனது சொந்த செலவில் 6 பவுன் தங்கச் செயின் வாங்கி தருகிறேன்" என்றார்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் எம்.பி. எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், க.அண்ணாதுரை, நா.அசோக்குமார், டி.கே.ஜி.நீலமேகம், முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.ராமச்சந்திரன், கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செவ்வாய்க்கிழமை அன்று பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கில், திமுக கூட்டணி நிர்வாகிகள், ஊழியர்களை தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி சந்தித்து வாக்குகள் கேட்டார்.

இதேபோல், பட்டுக்கோட்டையிலும் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் கா.அண்ணாதுரை, நா.அசோக்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஒன்றிய, நகரச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story