முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
 கல்லூரி பேராசிரியர்கள்  உள்ளிருப்பு போராட்டம் 
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதல்வர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி பேராசிரியர்கள் நேற்று மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகில் கா அம்பாபூர் பகுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 15 விரிவுரையாளர்களும் இரண்டு ஊழியர்களும் பணியாற்றி வரும் நிலையில் பணி நிரந்தரம் செய்யப்படாத 29 விரிவுரையாளர்களும் 32 ஊழியர்களும் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் பணி நிரந்தரம் செய்யப்படாத பெண் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் கல்லூரியின் புல முதல்வர் ( டீன்) பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மாதத்தில் அதே கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர் பல்கலைக்கழக தலைமை இடத்துக்கு புகார் அளித்துள்ளார்.

இது குறித்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐந்து பேர் அடங்கிய குழுவினர் உடையார்பாளையம் அருகில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணை குறித்து இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இதற்கிடையில் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு பதிவு செய்த விரிவுரையாளர் உள்ளிட்ட ஐந்து ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்க டீன் தரப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் ஐந்து பேரும் தற்காலிக வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பணி நீட்டிப்பு வழங்கப்படாத ஐந்து பேருக்கு ஆதரவாக கல்லூரியில் பணியாற்றும் அனைத்து விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் வலுவடைந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் உள்ளிட்ட பணி நீட்டிப்பு செய்யப்படாத ஐந்து ஊழியர்களின் பெயர்களும் வருகை பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் திடீரென பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வளாகத்திற்கு உள்ளேயே தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதல்வர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்து அதனால் பாதிக்கப்பட்டுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த ஊழியர்களுக்கு பாரபட்சம் இன்றி பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் கல்லூரி வளாகத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story