ஏற்காடு வனபதிக்கு தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை
Mavatta ஆட்சியர்
ஏற்காடு, கருமந்துறை வனப்பகுதிகளுக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கருமந்துறை, சேர்வராயன், பாலமலை, கஞ்சமலை, ஜருகுமலை, நகரமலை, சூரியமலை, பச்சமலை, கல்ராயன்மலை, கூடமலை மற்றும் வனப்பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் வனத்தீ ஏற்படாத வகையில் வனத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள், ஊர் தலைவர்கள் ஆகியோருடன் சேர்ந்து தீயணைப்புத்துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வதுடன் ஏற்காடு, கருமந்துறை போன்ற மலைப்பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளிடம் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிகளுக்கு எடுத்து செல்லாமல் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த விவசாய மிச்சங்களை எரிக்க கூடாது. இது தொடர்பாக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கருங்காலி, குரும்பப்பட்டி போன்ற கிராமங்களில் உள்ளவர்களிடம் வனத்தீ விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்து போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மூலம் காட்டுத் தீ குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
வனப்பகுதிகளில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீ தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட வேண்டும். கோடைகாலம் முடியும் வரை வனப்பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும். மேலும், பொதுமக்கள் காட்டுத் தீ தொடர்பான தகவல்களை உடனடியாக 1800 599 0427 என்ற கட்டணமில்லா சேவை எண்ணிலோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.