மண்மேல்குடியில் தடைக்காலம் எதிரொலி: மீன்கள் விலை உயர்வு
விற்பனைக்கு வந்த மீன்கள்
மணமேல்குடி மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை 60 நாட்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து விசைப்படகு மீனவர்கள் கடந்த 15ஆம் தேதி முதல் கடலுக்கு செல்லவில்லை.
கடலில் குறைந்த தூரத்துக்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீன்கள் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்படுவது வழக்கம்.
கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது இங்கு மட்டும் 15க்கும் மேற்பட்ட மின் ஏலக்கடைகள் செயல்படுகின்றன. இந்த மார்க்கெட்டுக்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேது பாவசத்திரம், மந்திரிபட்டினம், போன்ற பகுதிகளில் நாட்டு படகுகளில் மீன்பிடிக்கப்படும் மீன்களும் கோட்டைப்பட்டினம்,
ஜெகதாபட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுமட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான நாகை, காரைக்கால், ராமநாதபுரம் பகுதிகளில் இருந்தும் சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மீன்களை திருச்சி, மதுரை,
புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து வாங்கி செல்வார்கள் போதிய வரத்து இல்லாததால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் விரிச்சோடி காணப்பட்டது. விலை உயர்வால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.