ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு - அமைச்சர் தகவல்

தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 67 வது தேசிய அளவிலான 17 வயது பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி 26ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு மாணவிகளை வாழ்த்தி பேசினார்.அப்போது மாணவிகளுக்கு டி ஷர்ட் மற்றும் வாலிபால் ஆகியவற்றை பரிசளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு பல மாநிலங்கள் தயங்குகின்றன. காரணம் அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகளையும் கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அந்த வகையில் தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் விளையாட்டு துறையில் மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து தேசிய அளவிலான போட்டிகளை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர்.

மேலும் தற்போது இன்று ஓர் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது .அதில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை படி பதவி உயர்வு வழங்குவது போல ஒன்றிய அளவில் வழங்கப்பட்டு வருகின்ற துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயார் செய்து அதன்படி பதிவு உயர்வு வழங்கும் ஆணை தமிழக முதல்வரின் ஒத்துழைப்போடு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.என்று பேசினார்.

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சசிகலா, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நிர்மலா,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி, கொங்கு நாடு கல்லூரியின் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story