தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் பந்தல் அலங்கார பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் பந்தல் அலங்கார பொருட்கள் குடோனில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தஞ்சாவூர் அருளானந்த நகரை சேர்ந்தவர் பந்தல் சிவா என்கிற ஆர்.சிவசுப்பிரமணியன் (58). பிரபல பந்தல் ஒப்பந்தகாரர். பந்தல், அலங்கார வளைவுகள் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக இவர் பந்தல், மேடை அலங்காரம், கட் அவுட் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களுக்கு அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களை தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் உள்ள குடோனில் வைத்திருந்தார். தமிழகம் மட்டுமில்லாமல், தென்னிந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், மாநாடுகள், சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு விழாவுக்கு பந்தல், அலங்கார வளைவுகள், கட்அவுட் அமைக்க இந்த குடோனில் இருந்து தான் பொருட்களை கொண்டு செல்வார்கள். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த பந்தல் குடோனில் இருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அந்த தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால், அந்தப் பகுதி முழுவதும் தீப்பிளம்பாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சாவூர் தீயணைப்புத்துறை வீரர்கள் 4 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், குடோனில் இருந்த பந்தல் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. இவற்றின் சேதமதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.