வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் வரதராஜ பெருமாள் தேர்
வரதராஜ பெருமாள் கோவில் தேர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம் மே 26ம் தேதி கோலாகலமாக நடந்தது. இதையொட்டி வெயில், மழை, புயலின்போது தேர் சேதமடையாமல் இருக்க, காந்தி சாலை, ஆஞ்சநேயர் கோவில் அருகில், தேரடியில் நிறுத்தப்பட்டிருந்த தேரின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த துருப்பிடிக்காத இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டிருந்த கூரை அகற்றப்பட்டது.
தற்போது, தேரோட்டம் முடிந்து இரு வாரங்களுக்கு மேலாகியும் மீண்டும் பாதுகாப்பு தகடுகளால் கூரை அமைத்து தேர் மூடப்படவில்லை. இதனால், வெயிலில் காய்ந்து, கோடை மழையில் நனைந்து தேரின் பாகங்கள் சேதமாகும் சூழல் உள்ளது. எனவே, வரதராஜ பெருமாள் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கோவில் உதவி ஆணையர், நிர்வாக அறங்காவலர் சீனிவாசன் கூறுகையில், ''வரதராஜ பெருமாள் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை அமைக்கும் ஊழியர்கள் நாளைதான் வருகின்றனர். அவர்கள் வந்தவுடன், பாதுகாப்பு கூரை அமைத்து தேர் மூடப்படும்,'' என்றார்.