அரசு பஸ் இயக்க எதிர்ப்பு; பயணிகள் தவிப்பு !

கொரனூருக்கு அரசு பஸ் இயக்க எதிர்ப்பு தெரிவித்து, எப்பநாடு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த தூனேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட எப்பநாடு கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. எப்பநாட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் 40 குடும்பங்கள் உள்ள கொரனூரும், அங்கிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் 30 குடும்பங்கள் வசிக்கும் பிக்கப்பட்டிமந்து கிராமமும் உள்ளன.

கொரனூர் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களும், பிக்கப்பட்டிமந்து கிராமத்தில் தோடர் பழங்குடியின மக்களும் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக ஊட்டியில் இருந்து எப்பநாடு வரை மட்டும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எப்பநாட்டில் இருந்து கொரனுர் செல்லும் போது மாலை நேரத்தில் வனவிலங்கு தாக்குதல் இருப்பதால் கொரனூர் மற்றும் பிக்கப்பட்டிமந்து கிராமத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்ததால், கொரனூர் வரை பஸ் இயக்க வலியுறுத்தி அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 25-ந் தேதி முதல் கொரனூர் வரை பேருந்து இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் எப்பநாடு வரை இயக்கப்பட்ட அரசு பேருந்தை, கொரனூர் வரை இயக்க 25-ந் தேதி எப்பநாடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு பேருந்தை எப்பநாடு தாண்டி செல்ல அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர். இதனால் கொரனூர் கிராம மக்கள் மீண்டும் வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரனுர் கிராம மக்கள் கடந்த திங்கட்கிழமை ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் ஊருக்கு பேருந்து இயக்க வேண்டும் என மனு அளித்தனர். கொரனூருக்கு மீண்டும் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் எப்பநாடு கிராம மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஊட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., மகராஜ், போலீஸ் எஸ்.பி., சுந்தர வடிவேல் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று மாலை 6:15 மணிக்கு ஊட்டியில் இருந்து கொரனூர் கிளம்பிய பேருந்து எப்பநாடு தாண்டி செல்ல அனுமதிக்க மாட்டோம் என எப்பநாடு கிராம மக்கள், ஊர் தலைவர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

எப்பநாடுக்கு தனி பேருந்தும், கொரனூருக்கு தனி பேருந்தும் இயக்க வேண்டும் என எப்பநாடு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே இருள் சூழ்ந்து விட்டதால் பேருந்தில் இருந்து இறங்கி வனப்பகுதி வழியாக நடந்து செல்ல முடியாது என்று பேருந்தில் இருந்த கொரனூர் மற்றும் பிக்கப்பட்டிமந்து மக்களும் மறுப்பு தெரிவித்து விட்டனர். எனவே எப்பநாடு கிராமத்திற்கு 2 கிலோமீட்டர் தூரத்திற்கு முன் நெல்லிமந்து என்ற இடத்தில் அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் இருதரப்பு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ., மகராஜ், போலீஸ் டி.எஸ்.பி., விஜயலட்சுமி, இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான குழுவினர் எப்பநாடு மற்றும் கொரனூர் மக்களிடம் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது. போலீஸ் எஸ்.பி., சுந்தரவடிவேல் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் எப்பநாடு பகுதியில் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து பேருந்தில் காத்திருந்த கொரனூர் மற்றும் பிக்கபட்டிமந்து‌‌ மக்கள் கூறியதாவது:- பல ஆண்டுகளாக எப்பநாட்டில் இருந்து , இரவு நேரத்தில் எங்களது சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் போது வனவிலங்குகள் தாக்குதல் இருந்தது. எனவே எங்கள் ஊருக்கு அரசு பேருந்து இயக்க கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தற்போது ஊட்டியில் இருந்து எப்பநாடுக்கு 6.15 மணிக்கு புறப்படும் பேருந்தை கொரனூர் வரை இயக்க உத்தரவிடப்பட்டது.

பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்ளனர். எப்பநாடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் போலீஸார் எங்களை பேருந்தில் இருந்து இறங்க சொல்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம். எங்கள் கிராமத்திற்கு இந்த பேருந்தை இயக்க வேண்டும், அதுவரை நாங்கள் இந்த பேருந்தில் காத்திருப்போம்," என்றனர்.

Tags

Next Story