கேரள மீனவர்களை கண்டித்து போராட்டம்!
விசைப்படகு
தூத்துக்குடியில் கேரள மீனவர்களை கண்டித்து 280க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 280க்கும் மேற்பட்ட விசைப்படகு மூலம் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன் பிடிப்பு தொழில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படகுகள் அதிகாலை ஐந்து மணிக்கு கடலுக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்குள் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்ப வேண்டும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிகாலை கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஏராளமான விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி துறை முகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் மீன்கள் கிடைக்காமல் தொழில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் இதற்கான காரணம் குறித்து ஆல் கடல் பகுதியில் தங்கி தொழில் செய்யும் நாட்டுபடகு மீனவர்களிடம் கேட்டபோது இரவு நேரங்களில் கேரளாவை சேர்ந்த விசைப்படகுகள் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் தமிழக கடற்கரைப் பகுதிகளில் அத்துமீறி உள்ளே நுழைந்து மீன்பிடித்து விட்டு காலை தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வரும்போது சென்று விடுவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு தொழிலாளர்கள் தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சுமார் 5000 க்கு மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். பல கோடி ரூபாய் அந்நிய செலவானி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story