தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து போராட்டம்
கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டவருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி மாத சம்பளம் வழங்கபடுவதுடன் தீபாவளி பண்டிகையின் போது 20% போனசும் வழங்கபட்டு வந்தது.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் கணக்குகளும் முடக்கபட்டு அமலாக்க துறையின் விசாரணையில் உள்ளதால் ஓராண்டாக தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் குறிப்பிட்ட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு தீபாவளி போனசும் இது வரை வழங்கபடாமல் உள்ளது. இதையடுத்து கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்டோர் எஸ்டேட் அலுவலகத்தின் முன் நேற்று காலை முதல் மாலை வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் எஸ்டேட் மேலாளர் இல்லாததால் தொழிலாளர்களுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் தொழிலாளர்கள் போனஸ் வழங்காததை கண்டித்து கோடநாடு எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதுடன் அலுவலக ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே அமலாக்க துறை எஸ்டேட் கணக்குகளை முடக்கி உள்ளதால் தற்போது தேயிலை உற்பத்தி மூலம் கிடைக்கும் வருவாயில் 25% நிதியை பிடித்தம் செய்வதாகவும் இதனால் முறையாக சம்பளம் வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் அது குறித்து அமலாக்க துறைக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் எஸ்டேட் நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.