விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மறையூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ 6 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
ஆனால் திறந்து வைத்து மூன்றே நாட்களுக்குள் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் கீழ் பகுதியில் சென்ற தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் பேருந்து நிறுத்தத்தை உடைத்துக் கொண்டு வெளியேறி புதியதாக திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் முழுவதும் சேதமடைந்தது. பேருந்து நிறுத்தத்தை உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அடுத்து தவறான இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேலை உத்தரவு வழங்கியதாக நரிக்குடி பிடிஓ ராஜசேகரன்(வ.ஊ) மற்றும் இளநிலைப் பொறியாளர் பிரபா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் முன்பு விருதுநகர் ,
கன்னியாகுமரி நெல்லை, தென்காசி , தூத்துக்குடி, மதுரை தேனி உள்ளிட்ட 10 மாவட்டங் களிலிருந்து 500க்கும் மேற்பட்ட ஊரகவர்ச்சித் துறை ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரையும் , மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்ற பொறுப்பாளர்களிடம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக் கூறி மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனார்.
துணைக் காவல் கண்காணிப்பாளர் பவித்ரா நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மாநில முழுவதும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும்,
மாநில முழுவதும் இந்தப் போராட்டம் கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.