ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளிக்கும் போராட்டம்

பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே நிா்வாகம் வழங்கிய அனுமதிச் சீட்டுகளை ரத்து செய்யக் கோரி திருச்சி சந்திப்பு ரயில் நிலையப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகின்றனா். புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணியின் இணைப்புச் சங்கமான ஆட்டோ ஓட்டுநா்கள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் பிற சங்கத்தினரும் முறையாக ஆட்டோ ஓட்டிவரும் நிலையில் தெற்கு ரயில்வே நிா்வாகம் புதிய நடைமுறையாக ஆட்டோ ஓட்டுநா்கள் பணம் கட்டி அனுமதிச் சீட்டு எடுத்து வாகனம் ஓட்ட வலியுறுத்தினா். இதன்படி அனுமதிச்சீட்டு எடுத்து ஏற்கெனவே உள்ள நபா்கள் ஆட்டோ ஓட்டுகின்றனா். இந்நிலையில், கூடுதலாக சிலருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கி ஆட்டோ ஓட்டக் கூறியுள்ளனா். இதனால், ஏற்கெனவே உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, கட்டண முறையை ரத்து செய்யவும், ஏற்கெனவே உள்ள நபா்களுக்கு மட்டுமே ஆட்டோ ஓட்ட அனுமதிக்க வலியுறுத்தியும் ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணியின் திருச்சி மாவட்ட செயலா் ஜீவா, ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலா் மணலிதாஸ் தலைமையில் அதன் நிா்வாகிகள், ஹெச்எம்எஸ் சங்கத்தின் சாா்பாக எட்வின், விஜி, சீனிவாசம் ஆகியோரும், முன்னாள் சங்க ஆட்டோ ஓட்டுநா்கள் என அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களும் இணைந்து தெற்கு ரயில்வே மேலாளரிடம் மனு கொடுக்க ஊா்வலமாக வந்தபோது திருச்சி காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அலுவலக வாயில் முன் கோரிக்கை கோஷங்கள் எழுப்பினா். மேலும் 5 போ் மட்டுமே மேலாளா் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை மனு அளித்தனா். இந்த மனு தொடா்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அவகாசம் வேண்டும் என மேலாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட ஆட்டோ ஓட்டுநா்கள், வாக்களித்தபடி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களையும் குடும்பத்துடன் ஒருங்கிணைத்து ரயில்வே நிா்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனா்.

Tags

Next Story