தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே களஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சீதாராமய்யர் இவர் இப்பகுதியில் வேதபாடசாலை நடத்தி வருகிறார். இவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு வெளியிட்டார் இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபயிற்சி மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். தாக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் சீதாராமய்யர் பதிவிட்டுள்ளார் இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.க ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு கடந்த ஒருமாதத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சுமார் 38 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பேருந்து நிலையம் அருகில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். இதனையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டக்கார்களிடம் பாபநாசம் டிஎஸ்பி அசோக் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து ஜூன் 10ஆம் தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்யாவிடில் ஜுன் 11ஆம் தேதி மாலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனக்கூறினர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார், பாமக தொகுதி பொறுப்பாளர் ஜோதிராஜ், அமமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ் (எ) கோவிந்தசாமி, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு தொகுதி பொறுப்பாளர் முருகானந்தம், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் கனகராஜ், வீரமுத்தரையர் முன்னேற்றக் கழகம் மாறன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கோதண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.