அரசு ஊழியர் காத்திருப்பு போராட்டம் !
பெண் சர்வயேரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பெரியக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பவ்யா (24). இவர் சர்வேயராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆம் தேதி, சோழகன்குடிக்காட்டை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் தங்கை ஜோதி என்பவர் இடத்தை அளவீடு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது முருகானந்தம் அவரது மனைவி செல்வகுமாரி, தங்கை ஜோதி அவரது கணவர் சுபாஷ் ஆகியோர் அளவீடு செய்யும் பணியை வீடியோ எடுத்துள்ளனர். அப்போது சர்வேயர் பவ்யா எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என முருகானந்திடம் கேட்டுள்ளார். இதற்கு முருகானந்தம் தகாத வார்த்தையில் பேசி கொலை செய்து விடுவேன் என மிரட்டி பவ்யாவின் தலையில் தாக்கியுள்ளார். இதை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியம்மாளையும் தாக்கியுள்ளார். இது குறித்து பவ்யா மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சர்வேயர் பவ்யா மீது தாக்குதல் நடத்திய முருகானந்தம் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். சமரச பேச்சுவார்த்தை செய்த காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் மாவட்ட செயலாளர் பாரதிராஜா மாவட்ட தலைவர் தானியல் மார்ஸ் தலைமையில் திங்கள்கிழமை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான சர்வேயர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் திங்கள்கிழமை சர்வே பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story