இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்
ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கத்தினர்
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு கணக்கில் அடங்காமல் சுற்றுலா பயணிகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை தேவைகளான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சரிவர வழங்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த சென்னை உயர்நீதிமன்றம், நேற்று முதல் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்றே நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய வேண்டும் என உத்தரவிட்டது.
நீலகிரிக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டாலும், இ-பாஸ் குறித்து பலருக்கும் தெரியாததால், நேற்றும் இன்றும் நீலகிரிக்கு குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்தனர். இதனால் முக்கிய சுற்றுலா தளங்களும் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. எனவே இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- இ-பாஸ் நடைமுறை குறித்து தமிழகம் மற்றும் கேரளா உள்பட பல்வேறு மாநில மக்களுக்கு சரிவர தெரியவில்லை. ஒரு சில நேரங்களில் இ-பாஸ் இல்லாமல் வந்து நீண்ட நேரம் சோதனை சாவடியில் காத்திருந்து திரும்பி செல்கின்றனர். இதனால் கோடை சீஸனை முன்னிட்டு ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த தங்கும் விடுதிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் 80 சதவீதம் காட்டேஜ்கள் காலியாக இருக்கும் நிலையில், இ-பாஸ் நடைமுறையால் காட்டேஜ் தொழில் உள்பட அனைத்து சுற்றுலா தொழில்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல், மே ஆகிய கோடை சீஸனில் மட்டும்தான் ஒரு வருடத்திற்கு தேவையான முழு வியாபாரம் நீலகிரியில் நடக்கும். தற்போது இ-பாஸ் நடைமுறையால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இ-பாஸ் முறையை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் காட்டேஜ்கள் மூடப்படும். சுற்றுலாவை நம்பி உள்ள பல்வேறு அமைப்புகளை ஒன்று சேர்த்து வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.