மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்
செம்பனார்கோயில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 192 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வரத்தினம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அருள்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ரமா வரவேற்றார்.
இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு 192 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பள்ளி படிப்பை முடித்த மாணவிகள், எந்த தடையும் இன்றி கல்லூரி படிப்பை தொடங்கிடும் வகையில் மாதம் ரூ.1000ம் வழங்கி வருகிறார். இது போன்று பெண்களின் வளர்ச்சிக்கு முதலமைச்சர் அயராது பாடுபட்டு வருகிறார். பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் நடப்பாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு எனது சொந்த செலவில் பேனா வழங்க உள்ளேன். அதனைப் பெற்று தேர்வு எழுதி அனைத்து மாணவ-மாணவிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்த பள்ளியில் சமையல் கூடம், சைக்கிள் ஸ்டாண்ட், கலையரங்கம் ஆகியன கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். விழாவில் கூட்டுறவு தலைவர் ஞானவேலன், திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அமுர்தவிஜயகுமார், அப்துல் மாலிக், ஒன்றியக்குழு துணை தலைவர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் வெண்ணிலா தென்னரசு, ஊராட்சி மன்ற தலைவர்துணைத் தலைவர் உமாராணி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் தமிழ் வேந்தன் நன்றி கூறினார்.