மாநகராட்சியில் தடையின்றி குடிநீா் கிடைக்க ஏற்பாடு
திருச்சி மாநகராட்சி
திருச்சியில் புதன்கிழமை மாலை நடந்த மாநகராட்சியின் சாதாரணக் கூட்டத்துக்கு மேயா் அன்பழகன் தலைமை வகித்தாா். துணை மேயா் திவ்யா, ஆணையா் வே. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் ஜவஹா் (காங்), ஜாபா்அலி (திமுக), அம்பிகாபதி (அதிமுக), ரமேஷ் (திமுக), காஜாமலை விஜய் (திமுக), கலைச்செல்வி (திமுக) உள்ளிட்டோா் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனா்.
அதற்குப் பதிலளித்து மேயா் மு. அன்பழகன் பேசுகையில், மாநகராட்சிக்கான குடிநீா் சேகரிப்புக் கிணற்றில் ஏற்பட்டுள்ள பழுதால், குடிநீா் உந்துதல் பிரச்னையை சரி செய்யும் பணி நடைபெறுகிறது. 2 மாதங்களில் இப்பிரச்னை சரி செய்யப்படும். இதற்கிடையில், மக்களுக்கு தடையின்றி குடிநீா் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உறுப்பினா்கள் மக்களிடையே விளக்க வேண்டும்.
பல சாலைகளை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், புதை வடிகால் குழாய்களில் அடைப்புகளை நீக்கவும், மாற்று வழியில் கழிவுநீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். கூட்டத்தில், அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் தரைக்கு அடியில் உள்ள கழிவுகளை அகற்றும் திட்டத்தை ரூ.44.5 கோடியில் செயல்படுத்துதல், ஒலிம்பிக் பயிற்சி மையம் அமைக்க 50 ஏக்கா் நிலம் வழங்குதல் உட்பட 96 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.