சலவைத் தொழிலாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் !!
நலத்திட்ட உதவிகள்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் முன்முயற்சியால், சலவைத் தொழிலாளிக்கு நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், அழகியநாயகிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50), இவரது மனைவி சித்ரா (வயது 41). சித்ரா பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி ஆவார். மாரியப்பன் வாடிக்கையாளர்கள் தரும் துணிகளை தள்ளு வண்டியில் வைத்து துணிகளை தேய்த்துக் கொடுத்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவருடைய தள்ளுவண்டி பயன்படுத்த முடியாத நிலையில், பழுதடைந்து இருப்பதால், தனக்கு தள்ளுவண்டி மற்றும் சலவைப்பெட்டி பெற்றுத்தருமாறு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஏ.மேனகாவிடம் தெரிவித்தார். இதையடுத்து மேனகா, சமூக ஆர்வலரும் என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவரும், சுகாதாரப் பணிகள் துறை ஓய்வு அலுவலருமான வ.விவேகானந்தத்திடம் தெரிவித்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை மருத்துவர் சாட்சி அ.சுரேந்தர் ரூபாய் 7,000 மதிப்புள்ள நடமாடும் தள்ளு வண்டியையும், பட்டுக்கோட்டை ஆலயம் அறக்கட்டளை தலைவர் ஏ.கே.குமார் 7,000 மதிப்புள்ள சலவைப் பெட்டியையும் இந்த தம்பதிக்கு நன்கொடையாக வழங்க முன் வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று பட்டுக்கோட்டை விஎன்.எஸ் சத்திரம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடமாடும் சலவை வண்டி மற்றும் சலவைப் பெட்டி சமூக ஆர்வலர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் வ.விவேகானந்தம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் எஸ்.ஜெ.ராஜேஷ் கண்ணா, சமூக ஆர்வலர்கள் ஞானசேகரன், சிரமேல்குடி குப்பு.குமரேசன், சலவை தொழிலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தர காரணமாக இருந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கும், சமூக ஆர்வலர் விவேகானந்தத்திற்கும் பயனாளி மாரியப்பன் நன்றி தெரிவித்தார்.