திருச்சியில் நாளை வாகனங்கள் பொது ஏலம்
வாகனங்கள் பொது ஏலம்
திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 126 இருசக்கர வாகனங்களை அரசுடமை ஆக்குவதற்கு மாவட்ட அரசிதழில் மே ௧௩ அன்று செய்தி வெளியிடப்பட்டது. இந்த 126 வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. எனவே, மாவட்ட வருவாய் அலுவலரால் இந்த 126 வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
மேற்படி வாகனங்களின் பொது ஏலம் நாளை காலை 10:00 மணியளவில் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் (05.12.2023) மற்றும் (06.12.2023) ஆகிய தேதிகளில் 10:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.மேலும் காவல் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (07.12.2023) காலை 08:00 மணிமுதல் 10:00 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் 5000/-முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரியாக இரு சக்கர வாகனத்திற்கு 12% GST தொகையை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.