சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் மாவட்டம் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை வழங்கினார்.
”விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடையும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு ஜனவரி - 15ம் தேதி முதல் பிப்ரவரி - 14 ம் தேதி வரை மாவட்ட அளவிலான பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட திட்டமிட்டு தொடர்ந்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா தமிழ்நாட்டை படைப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு பங்குபெற்றனர். இந்த பேரணியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி ரோவர் ஆர்ச் வரை சென்ற முடிவுற்றது.
அதனைத்தொடர்ந்து தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் சாலை பாதுகாப்பு விதிகள் பொறித்த மஞ்சள் பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் இந்நிகழ்வில், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், பெரம்பலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.