கனங்கூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கனங்கூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி தாலுகா, கனங்கூர் புதிய காலனி மேற்கு தெருவில், பிரதம மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதே பகுதியில் கிழக்கு தெருவில் வசிக்கும் பொதுமக்கள் எங்களுக்கும் சரியாக தண்ணீர் வருவதில்லை என, குற்றம்சாட்டி, புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை தங்களது பகுதியில் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
மேலும், நேற்று காலை 9:15 மணியளவில் ஊராட்சி அலுவலகம் அருகே மலைக்கோட்டாலம் - பொரசக்குறிச்சி சாலையில், அரசு பஸ்சுக்கு முன் காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து, காலை 10:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.